வாசுதேவம்பட்டு
திருவண்ணாமலைக்கு 25 km வட மேற்கே அமைந்துள்ளது ஏழாவது க்ஷேத்திரமான வாசுதேவம்பட்டு. இங்குள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத பக்தவத்சலேஸ்வரர் ஆலயம் பழங்காலத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஆட்கொண்டேஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
இறைவன்: பக்தவத்சலேஸ்வரர்
இறைவி: சௌந்தரநாயகி
ஸ்தல விருட்சம்: வில்வ மரம்
தீர்த்தம்: சேயாறு
பூஜித்தவர்கள்: சித்திரகுப்தன், விசித்திரகுப்தன்
இவ்வூரையும் இதை சார்ந்த பகுதிகளையும் வாசுதேவ ராஜா என்பவர் ஆண்டு வந்தார் என்பதற்கு குறிப்புகள் உள்ளன. இதற்கு சான்றாக ஒரு இடிந்த கோட்டையும் அதன் அருகே 8 அடி உயர ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சிலையும் நினைவு சின்னங்களாக உள்ளன.
அம்பாள் ஸ்ரீ காமாட்சி அமைத்து பூஜித்த இந்த திருத்தலத்தில் ஸ்ரீ சித்திரகுப்தன் மற்றும் ஸ்ரீ விசித்திரகுப்தன் வணங்கி விமோச்சனம் பெற்றனர் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இவ்விருவரும் யமலோகத்தில் ஜனன மரண கணக்கு எழுதுவதில் தவறு செய்த காரணத்தால் சபிக்கப்பட்டு பாவவிமோச்சனம் வேண்டி இத்திருத்தலத்திற்கு வந்து அம்மையப்பரை பூஜித்து ஈசான்ய மூலையில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் சிவன் சந்நிதியில் வழி பட்டு வருகையில் தனி சந்நிதிகள் கொண்டுள்ள இவ்விருவரையும் வழி படுகின்றனர். இவ்வழிபாட்டால் பாவங்கள் மன்னித்தருளி ஆயுள் நீடித்து மன அமைதியுடன் நோயின்றி வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை
அதே மாதிரி இத்திருத்தலத்திற்கு வந்து அம்மையப்பரை வழிபட்டால் குறுகிய எண்ணம் உள்ளவர்களுக்கு பரந்த மனப்பான்மை உண்டாகுவதோடு வஞ்சகம், பழி வாங்குதல் போன்ற கொடூர எண்ணங்கள் அகன்று நற்குணங்கள் உள்ளவர்களாகவும் தான தர்ம சுபாவம் மிக்கவர்களாகவும் வளமோடு வாழ்வார்கள் என்பது திண்ணம். இத்திருத்தலத்தின் வழிபாடு நல்லொழுக்கத்திற்கு விட்டது ஆகிறது.