தென்பள்ளிப்பட்டு
திருவண்ணாமலைக்கு 27 km வடகிழக்கே உள்ள தென்பள்ளிப்பட்டு அம்பாள் அருள் பாலித்து நின்ற மூன்றாவது ஸ்தலமாகும். இங்கு வந்ததும், ஈசன் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருவண்ணாமலைக்கு நேர் அருகில் வந்தும், ஈசனடி சேராததை எண்ணி மனம் தளர்ந்து வேதனையுற்றார். தன் தங்கையின் மன சஞ்சலத்தை போக்க ஸ்ரீ மஹாவிஷ்ணு எழுந்தருளி அம்பாளை தொடர்ந்து பூஜிக்குமாறு பணிந்தார். அவ்வாறே தன் பூஜையை சேயாற்றின் கரையில் தொடர்ந்தார்.
இறைவன்: கைலாசநாதர்
இடைவி: கனகாம்பிகை
ஸ்தல விருட்சம் : அரச மரம்
தீர்த்தம்: செய்யாறு
பூஜித்தவர்கள்: ஞானதேசிக ஸ்வாமிகள்
பாலாற்று தென்கரையில் 107வது திவ்ய க்ஷேத்திரமான திருப்பாற்கடல் என்ற புனித ஊரில் பள்ளி கொணடருளும் ஸ்ரீ மஹாவிஷ்ணு இங்கு எழுந்தருளி அம்பாள் ஸ்ரீ காமாட்சிக்கு வழி காட்டி அப்புனித இடத்திலிலேயே பள்ளி கொண்ட பெருமாளாக திருத்தலம் கொண்டார். ஆகவே இந்த இடம் தென்பள்ளிப்பட்டு என்ற பெயர் பூண்டது.
முஹம்மதியர்களின் ஆட்சி காலத்தில் தளபதி மாலிக் கஃவூரின் படையெடுப்பின்போது 100 கால் மண்டபம் 16 கால் மகாமண்டபம், அந்தராலயம் மற்றும் பிரகார சந்நிதிகளோடு சிறந்த கலை நுட்பத்துடன் பல்லவர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாள் திருத்தலம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி சிதிலமடைந்தது. ஆக பழைய தென்பள்ளிப்பட்டு கிராமம் அம்பாள் அமைத்து பூஜித்த சிவப்பதிக்கு மேற்கே குடிபெயர்ந்தது. தற்சமயம் இச்சிவப்பதி அமைந்துள்ள பகுதி மேட்டுப்பாளையம் தென்பள்ளிப்பட்டு என்றே அழைக்கப்படுகிறது.
தற்சமயம் 19 கற்கால்களை கொண்ட முகமண்டபம் சரி செய்யப்பட்டு சோழர்களின் அடையாள சிற்பங்களான இரட்டை மீன், யானை முக மீன், நாகம் பிறை சந்திரனை பிடிப்பது போன்ற சோழகால சிற்பங்களுடன் உள்ளது.
மூலவர் சந்நிதிக்கு வடக்கே முக மண்டபம் , அந்த்ராலயம் கொண்ட தனி சந்நிதியில் அம்பாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஈசானிய மூலையில் புதிதாக நவகிரஹ சன்னிதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊர் மக்கள் முடிந்த வரை ஒரு வேளை பூஜையும் திருவிழாக்களையும் செய்து இறைவனை வழிபாட்டு வருகிறார்கள். ஆலயம் மற்ற சந்நிதிகளுடன் கூட வளர்ச்சி காணவேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.
இக்கோவிலுக்கு சற்று கிழக்கே ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள மண்டபத்தில் தான் திருவிழாக்காலங்களில் திருவண்ணாமலையிலிருந்து வரும் உற்சவர் ஸ்ரீ அண்ணாமலையாரின் ரிஷப வாஹனம் நிலை கொள்வது ஐதீகம். இவ்வாலயத்திற்கு நேர் கிழக்கேதான் சிதிலமடைந்த நிலையில் மிகப்பெரிய பெருமாள் கோவில் முட்புதர் மூடி கவனிப்பாரின்றி உள்ளது.
சிவன் கோவிலுக்கு நேர்மேற்கே 3 ஏக்கர் பரப்பளவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞான தேசிகர் ஸ்வாமிகள் சமாதி, பிருந்தாவனம் மற்றும் மடமும் உள்ளது. இம்மடம் திருவண்ணாமலை ஈசான்ய மடத்தின் கீழ் தமிழ் வேத பாடசாலையுடன் இயங்கி வருகிறது. 1853 ல் சமாதி எய்த இப்புனித சித்த புருஷர் பிருந்தாவனத்தில் லிங்க ரூபமாக காட்சி தருகிறார். இவரது வேதாகம கொள்கைகளை கற்றுத்தேர்ந்த பல சிஷ்யர்கள் உலகம் பூராவும் சென்று உபதேசம் செய்து பிருந்தாவனம் கொண்டுள்ளனர்.