top of page

தாமரைப்பாக்கம் 

 

திருவண்ணாமலைக்கு 27 km வடக்கே உள்ள ஆறாவது கைலாய க்ஷேத்திரம் தாமரைப்பாக்கம். 

 

இறைவன்: அக்னீஸ்வரர் 
இறைவி: திரிபுரசுந்தரி 
ஸ்தல விருட்சம்: ஆல மரம் 
தீர்த்தம்: சேயாறு 
பூஜித்தவர்கள்: மஹாவிஷ்ணு 

 

பிரதான மதில்சுவர்கள் மற்றும் நுழைவாயில்கள் இடிந்திருந்தாலும் உயரமான மேட்டின்மீது  கருங்கற்களால் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி தாயாருக்கு தனித்தனி சந்நிதிகள் பக்தி பரவசமூட்டும் வகையில் திகழ்கின்றன. மூலவர் அருவுருவம் மீது அவரது வெப்பம் தணிய பஞ்சலோக தாரா பாத்திரம் வழி புனித தீர்த்தம் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருப்பது ஒருஇனிய காட்சி. 

ஸ்ரீ திருமாலே அமிர்த கலசம் வைத்து பூஜித்த புனித இடத்தில் இந்த ஆறாவது ஸ்தலத்தை அம்பாள் ஸ்ரீ காமாட்சி அமைத்து பூஜித்தார். அவ்விடத்திலேயே மீண்டும் ஸ்ரீ லட்சுமி சமேதராய் எழுந்தருளி திருமால் ஈசனை பூஜித்தார். ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீ லட்சுமி தாயாருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எதிரே ஸ்ரீ கருடாழ்வார் வணங்கி நிற்க , அர்த்தமண்டபத்தில் இன்றும் மூலவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

  ஸ்ரீ மஹாவிஷ்ணு அமிர்தகலசம் அமைத்து ஈசனை பூஜித்த சமயம் ஸ்ரீ முருக பெருமானால் உருவாக்கப்பட்ட சேயாற்று வெள்ளப்பிரவாஹத்தில் அப்புனித கலசம் அடித்துவர அக்கலசத்தில் இருந்த தாமரை மலர் இங்கே ஒதுங்கியதால் இந்த இடத்திற்கு தாமரைப்பக்கம் என்ற பெயர் பெறலாயிற்று என்பது ஐதீகம்  இத்திருத்தலத்தில் சோழர்களின் 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் பல உள்ளன. 


இதில் ஸ்ரீ லிங்கோத்பவர் சிவமூர்த்தியில் அன்னமாக பிரம்மாவும் வராஹ ரூபமாக ஸ்ரீ விஷ்ணுவும் மறு உருவம் தாங்கியதை மிக நுட்பமாக அழகாக சித்தரித்து செதுக்கியுள்ளதும், ஸ்ரீ லிங்கோத்பவர் ரூப உருவத்திற்குள் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் சிவபெருமான் நுண்ணிய கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளதும் எவ்வாலயத்திலும் இல்லாத சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது 


அரியும் சிவனும் இணைந்து அருள்பாலிக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து பக்தர்கள்  வழிபட்டால் முன்கோபம், தீராத பகை , தீராத பிணி, புத்தி  சுவாதீனம் போக்கி நல்ல பண்புள்ளவர்களாக மாறுவர். நினைத்த காரியம் நிறைவேற அரியே பூஜித்த ஸ்ரீ அக்னீஸ்வரரை ஒரு குடம் சேயாற்று தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்து தாமரைப் பூ வைத்து சப்த பௌர்ணமி நாட்கள் வணங்கினால் காரியம் சித்தி பெறுவர் என்பது திண்ணம் 

TP 8.png
TP 5.png
TP 4.png
TP 9.png
TP 1.png
TP 3.png
TP 7.png
bottom of page