top of page

பழங்கோவில்

 

சப்த கைலாயங்களில் மத்திய கைலாயமான பழமைமிகு பழங்கோவில் கிராமம் திருவண்ணாமலைக்கு 32  KM வடகிழக்கே உள்ளது.

இறைவன்: பாலக்ரிதீஸ்வரர்

இறைவி: பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: வில்வ மரம்

பூஜித்தவர்கள்: அகஸ்தியர், புலத்தியர்

சுமார் ஒரு ஏக்கர் பரப்புடைய கோவிலில் அழகான சன்னிதானத்தில் நெற்றிக்கண்ணுடன் ஷோடச வடிவில் மூலவர் ஸ்ரீ பாலக்ரிதீஸ்வரர்  திருமுகத்துடன் வீற்றிருக்கிறார். மூலவர் சந்நிதிக்கு வடக்கில் தனி சந்நிதியில் அம்பாள் அருள்மிகு பாலாம்பிகை நின்ற கோலத்தில் திருமுகத்துடன் அருள்பாலிக்கிறார்

இத்திருத்தலம் பூண்டி ஸ்ரீ கரைகண்டேஸ்வரருக்கு அடுத்த அகஸ்திய முனிவரால் சிவனை பூஜித்த இரண்டாவது திருத்தலமாகும். வடலூர் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகளும் இப்பகுதிக்கு வந்த போதெல்லாம் இங்குள்ள சிவனை வணங்கி பூஜித்துள்ளார்.

ராஜ கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் பலி பீடமும் பிரதோஷ நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. வெளி பிரகாரத்தை சுற்றி வருகையில் திருவண்ணாமலை ஆலயத்தில் அமைந்திருப்பதுபோல் ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ  சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி , வடமேற்கே ஸ்ரீ வள்ளி தெய்வயானை  சமேத சிவசுப்ரமணியர் சந்நிதிகளையும் பக்தர்கள் தரிசித்து இறையின்பம் பெறலாம். இவ்வாலயத்தில் ஈசான்ய மூலையில் மிக பழமை வாய்ந்த மன்னர்  காலத்து கிணறும் உள்ளது.

இவ்வாலயம் சோழ மன்னர் மதுராந்தகன் உத்தம சோழ மன்னரால் ( 969-985 AD ) கட்டப்பட்டதாகும். இவ்வாலய கட்டடக்கலை இந்த முற்கால சோழர்களின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு. கோவிலின் பிரகார சுவரில் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் சந்திரகிரி மகாராஜா போரில் வெற்றிபெற இத்திருத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி பூஜித்து சென்று வெற்றி பெற்றதாகவும் அதனால் மகிழ்ச்சி கண்ட மகாராஜா பல பழங்கள் நெய்வேத்தியம் செய்து பூஜித்ததால் இக்கோவிலுக்கு பழங்கோவில் என்றும், சேயாறு உருவாக்கத்தின் பொது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அமிர்த கலசத்திலிருந்த பழம் இங்கு ஒதிங்கியதாக கருதப்பட்டதாலும் இவ்வூர் பெயர் அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்து பழங்கள் படைத்து நெய்வேத்தியம் செய்வது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது.

 

இக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகசிறப்பாக நடத்தப்படுகிறது. இவ்விழாவில் திருமணமாகாத கன்னி பெண்கள் அதிகம் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டு வேண்டுதல் நிறைவேறி மகிழ்கின்றனர் என்பது  நற்செய்தி. கிராம மக்களும் சிவனை நம்பினால் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு கலந்து கொள்கின்றனர். 

PK 3.png
Pazhankovil.png
PK 7.png
PKoil Aerial.png
PK 6.png
PK 2.png
PK 5.png
PK 1.png
bottom of page