நார்த்தாம்பூண்டி
திருவண்ணாமலைக்கு 27 km வடகிழக்கே உள்ள நார்த்தாம்பூண்டி சப்த கைலாய க்ஷேத்திரங்களில் ஐந்தாவதாகும். திருவண்ணாமலைக்கு அடுத்து தொன்மை வாய்ந்ததும் கல்வெட்டுகள் அதிகம் நிறைந்ததுமான இக்கோவிலுக்கு நாரத முனிவரால் சிவனை பூஜித்து வழி பட்ட இடம் என்று தனிச்சிறப்பு உள்ளது.
இறைவன்: கைலாசநாதர்
இறை வி: பெரியநாயகி
ஸ்தல விருட்சம்: இலந்தை மரம்
தீர்த்தம்: சேயாறு
பூஜித்தவர்கள்: நாரதர்
இக்கோவிலின் வடமேற்கு மூலையில் உள்ள இலந்தை மரத்தின் கீழ் ஸ்ரீ கைலாசநாதரை நாரதர் வழி படும் காட்சி நெஞ்சுருக்கச் செய்கிறது, தக்ஷன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார். ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவாநுபவ உபதேசம் செய்து தேவர்களாக்கி நல்வழிப்படுத்தினார். இதைக்கண்ட தக்ஷன் , த மருமகனாக இருந்தாலும் சிவனை பிடிக்காததால் தன் பிள்ளைகளை இவ்வாறு மாற்றியதற்காக நாரதர் மீது கோபம் கொண்டு அவர் உடல் நிலை கெட சாபமிட்டார். உடல் நலிந்து வருந்திய நாரதரும் சாப விமோசனம் பெறுவதற்காக , ஸ்ரீ பாலமுருகன் அன்னையோடு இணைந்து பூஜித்த சிவப்பதியான நார்த்தாம்பூண்டி வந்து சேயாற்றில் புனித நீராடி இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து சிவ மந்திர உச்சாடனம் செய்துகொண்டே பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்தார். மனம் மகிழ்ந்த இறைவனும் ரிஷப வாகனத்தில் நாரதருக்கு காட்சி தந்து சாபம் தீர்த்து அருளினார்.
அதன் பின் நாரதர் ஸ்ரீ முருகப்பெருமானை குறித்து மேலும் 12 வருடம் கிருத்திகை விரதம் இருந்து தவம் செய்தார். ஸ்ரீ முருகப்பெருமானும் காட்சி தந்து நாரத முனிவரை சப்த ரிஷிகளின் தலைமை ரிஷியாக எல்லோரும் வணங்கும்படி அருள் புரிந்தார். ஆக இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு மேலான மோட்சப்பதவி கிடைக்கும் என்பது திருவாய்மொழி. நாரதரின் பேரால் இவ்வூர் நாரதம்பூண்டியாக இருந்து காலப்போக்கில் நார்த்தாம்பூண்டி என மருவி வந்துள்ளது.
திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்திற்கு அடுத்த தொன்மை வாய்ந்த இக்கோவில் முகலாய படையெடுப்பின் போது அதிகம் பாதிப்பிற்குள்ளானதற்கான சான்றுகள் இன்றும் காண்கின்றன.
இக்கோவிலின் மேற்கு பிரதான மதில் சுவரை ஒட்டி ஸ்ரீ கொத்தளத்து விநாயகர் என்கிற ஸ்ரீ கோட்டை காத்த பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த பிள்ளையாரை இக்கோட்டத்தை ஆண்ட மன்னர்கள் காலம் முதல் இன்று வரை இப்பகுதி மக்கள் பயபக்தியுடன் காக்கும் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
மற்றும் ஸ்ரீ நாரத முனிவர் பூஜித்து புண்யம் பெற்ற இச்சிவப்பதியை பூஜித்து வணங்கினால் , குடும்ப தொல்லைகள் நீங்குவதோடு செய்வினைகள் நீங்கி உடல் நலமுடன் வளம் பெறுவோம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொலை குற்றம் செய்தவர்கள் கூட இத்திருத்தலத்தில் வழிபட்டு பாவ விமோச்சனம் அடைகின்றனர். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் புத்திரபாக்கியம் பெறுகின்றனர், மற்றும் நினைத்த காரியம் கைகூடுதல் , பதவி உயர்வு பெறுதல், தீராத நோய்கள் விலகுதல் போன்ற பல நற்பயன்கள் இங்கு வந்து வழி படும் பக்தர்கள் அடைகின்றனர் என்பது இவ்வாலயத்தின் புண்ணிய மஹிமை.