top of page

மண்டகொளத்தூர்

 

போளூரிலிருந்து 14 km தூரம் வட கிழக்கில் சென்றால்  சேயாற்றின் தென்கரையில் தொன்மை வாய்ந்த மண்டகொளத்தூரை  அடையலாம். இவ்வூரின் தெற்கு வாயிலின் முகப்பில் அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்தனி சமேத ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் கைலாய க்ஷேத்திரம் அமைந்துள்ளது.

இறைவன்:  தர்மநாதேஸ்வரர்

இறைவி:      தர்மஸம்வர்தினி

ஸ்தல விருட்சம் :     வில்வமரம்

தீர்த்தம்:     சேயாறு

பூஜித்தவர்கள்\:       பஞ்சபாண்டவர்கள்

தொண்டைமண்டலத்தின் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்து மேல்குன்ற நாட்டு பிரிவு சார்ந்த ஊர் என்றும் தக்ஷிண கைலாயம் என்றும், சோழ மன்னரின் 10ம் நூற்றாண்டு கல்வெட்டு மண்டகொளத்தூர் ( வடமொழியில் மண்டை என்றால் பெரிய) பற்றி கூறுகிறது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இவ்வூருக்கும் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படுகிறது. இவ்வூருக்கு அப்போதைய நாமம் கபால தடாக புரம் , பின்னர் மருவி மண்டகொளத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

பகாசூர வதம்:

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வருகையில் இவ்வூரில் தங்க நேர்ந்தது. அப்போது இவ்வூர் மக்களை ஊரின் கிழக்கில் உள்ள வேதகிரி மலையில் இருந்த பகாசூரன் மிகவும் கொடுமைப்படுத்தினான். பகாசூரனுக்கு பயந்து அவன் கட்டளைப்படி தினமும் ஒரு குடும்பம் வாரியாக ஒரு வண்டி சாதமுடன் இரு எருமைகளை வண்டியில் பூட்டி தன் மகனையும் அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பினால் வண்டியைத்தவிர அனைத்தையும் உண்டுவிடுவான்.

பகாசூரனின் கட்டளைப்படி அடுத்த நாள் தன் ஒரே மகனை அனுப்ப வெண்டுமே , அப்படி அனுப்பினால் வழக்கப்படி தன் மகனையும் கொன்று விடுவான் என்ற வருத்தத்தில் ஒரு தாய் ஒப்பாரியுடன் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். அத்தாயின் அழுகுரல் குந்தி, தர்மரின் காதில் விழ , அவர்கள் இத்தாயிற்காகவும் ஊருக்கு வந்ததும் அன்னம் அளித்து உதவிய மக்களை பகாசூரனிடமிருந்து   காப்பாற்றவும் , சூரனை வதம்  செய்யவும் , அச்சிறுவனுக்கு பதிலாக பீமசேனனை உணவு வண்டியுடன் அனுப்பிகின்றனர்.  பீமசேனன் வண்டி சாதத்தையும் தானே உண்டு விட்டு வண்டி நிறைய களி மண்ணை சூரனுக்கு எடுத்துச்செல்கிறான். இதனால் கோபமுற்ற பகாசூரனுக்கும் பீமசேனனுக்கும் வேதகிரி மலையருகில் தற்போதுள்ள பாராசூர் ( பக்காசூர்)  என்ற இடத்தில்  சண்டை நடக்கிறது. பீமசேனன் தன் கதாயுதத்தால் பகாசூரனின் தலையை அடிக்க அது உடம்பிலிருந்து  அறுந்து தற்போதுள்ள மண்டகொளத்தூரில் விழுகிறது. அசுர வேகம் குறையாமல் ஆக்ரோஷமாக விழுந்த அத்தலையை பீமன் தன் காலால் பூமியில் அழுத்தி இறக்கச்செய்கிறான். அதனால் ஒரு குளம் போன்ற பள்ளம் உருவெடுக்கிறது. அதன் உட்புற அமைப்பு மண்டை ஓடு வடிவில் அமைந்திருப்பதினால் அதற்கு கபால தடாகம் என்றும், ஊருக்கு கபால தடாகபுரம் என்றும் பின்னர் மண்டகொளத்தூர் என்றும் பெயர் வரலாயிற்று. இக்குளம் பின்பு சோழ மன்னர்களால் சீராக வெட்டப்பட்டது.

 

பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம்

அன்னை ஸ்ரீ காமாட்சியால் அமைத்து பூஜிக்கப்பட்ட முதல் கைலாய க்ஷேத்திரமான இந்த தக்ஷிண கைலாயத்தில் இருந்த சிவனை பாண்டவர்கள் இவ்வூருக்கு வந்த போது வணங்கி சென்றனர் என நம்பப்படுகிறது. பாண்டவர்கள் வணங்கி சென்ற ஊரின் நடுவில் இருந்த இத்திருத்தல மூலவர் பெயர் மருவி பாண்டவர்களின் மூத்தவரான ஸ்ரீ தர்மரின் பெயரில் அருள்மிகு தர்மஸம்வர்தினி சமேத ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் என்று திருநாமம் பூண்டது. சோழ மன்னர்களின் 10ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்கோவில்தான் அருள்மிகு தர்மஸம்வர்தினி சமேத  ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

 

பஞ்ச சிவஸ்தலங்கள் :

பாண்டவர்களின் வருகைக்கு பின் இவ்வூர் ஐந்து சிவலிங்கங்களை தன்னகத்தே கொண்ட திருத்தலமாக வளர்ந்தது. குந்தி, அர்ஜுனன் நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்கு நான்கு திசைகளிலும் சிவலிங்கங்கள் அடங்கிய நான்கு சிறு கோவில்களையும் அமைத்தனர். இவற்றை சோழர்களின் 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. அருள்மிகு தர்மஸம்வர்தினி சமேத  ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் என்ற தர்மரின் சிவத்திருத்தலம் , ஊரின் மத்தியில் அமைந்திருந்த அம்பாள் ஸ்ரீகாமாட்சி அமைத்து பூஜித்த சப்த கைலாய முதல் க்ஷேத்திரமாகும். பாண்டவரின் வருகைக்குப்பின் ஸ்ரீ தர்மரின் பெயரால் திருநாமம் மருவியது. இக்க்ஷேத்திரத்தின் மகாமண்டபத்தில் ஸ்ரீ பீமலிங்கம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு ஈசான்ய மூலையில் உள்ள கபால தடாகம் என்ற குளத்தின் வடகரையில் பஞ்ச பாண்டவர்களின் தாயார் ஸ்ரீ குந்தீஸ்வரியின் பெயரில் ஸ்ரீ குந்தீஸ்வரன் சந்நிதானம் சிலைகள் எதுமுமின்றி சிதிலமடைந்துள்ளது. வடக்கில் சேயாற்றின் தென்கரையில் ஸ்ரீ அர்ஜுனன் சந்நிதானமும் உள்ளது. அதற்கு  தற்சமயம் கோவில் இல்லை , லிங்கம் மட்டும் உள்ளது. மேற்கில் ஸ்ரீ சகாதேவன் சந்நிதி இருந்த இடம் தரை மட்டமாகி மறைந்துள்ளது. ஊருக்கு கிழக்கே மாணிக்கவள்ளி கிராமத்திற்கு மேற்கு வயல்வெளியில் ஸ்ரீ நகுலன் இடிந்த பீடத்தின் மேல் லிங்க ரூபமாக வீற்றிருக்கின்றார். இவ்வாறாக தொன்மை வாய்ந்த வரலாற்று பழமை மிக்க இம்மண்டகொளத்தூரில் ஆரம்ப காலம் தொட்டே பஞ்ச பாண்டவர்களுக்கு பஞ்ச சிவலிங்கங்களை அமைத்து மக்கள் வணங்கியுள்ளனர். பின்னர் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் அச்சிவலிங்கங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன .

மேலும் இப்பகுதியில் பல்லவ சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சமணர்களின் ஆலயங்கள் உள்ளன.. பின்னர் ஆட்சி செய்த சம்புவராய மன்னர்கள் காலத்தில் மண்டகொளத்தூர் பிராமணர்களின் ஆதிக்கம் கீழ் உயர்ந்து , வேதம் கற்பிக்கும் இடமாக மாறியது. தற்சமயம் பழமைக்கு புதுமை புத்துயிர் கொடுக்கும் வகையில் ஸ்ரீ சங்கர மடமும் வேத பாடசாலையும் அமைந்துள்ளது மகிழ்ச்சி தரக்கூடியதாகும். சம்புவராய மன்னர்கள் இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் ஆலயத்தை ஊர் மையப் பகுதியில் அக்ரஹாரத்தில் அமைத்தனர். சம்புவராயர்களாலும் இவ்வூர் மக்களாலும் இங்குள்ள சிவாலயங்களும், பெருமாள் கோவிலும் பல திருப்பணிகள் கண்டன. சோழ மன்னர்கள் 11 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ தர்மநாதேஸ்வரர் கோவிலுக்கும் 2 ஏக்கர் நிலசத்தை சம்புவராய மன்னர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரவரத  ராஜ பெருமாள் கோவிலுக்கும் நிலதானம் அளித்தனர். அந்நிலங்கள் இன்றும் இவ்விரு கோவில் பூஜைகளுக்கு பயன்பட்டு வருகின்றன.

முகமண்டபத்தின்மேல் மேல்கைலாய பிரபை அமைந்துள்ளது. அப்பிரபையில் கைலாசத்தில் சிவன், பார்வதி தேவியுடன் வீற்றிருக்க ஆதி சங்கரர் தரிசிப்பதும் சிவபெருமான் ஸ்படிக லிங்கத்தை ஆதி சங்கரருக்கு ஆசிர்வாதித்து அளிப்பது போன்றும் வலது பக்கத்தில் நந்திகேஸ்வரர் இடுப்பில் கைவைத்து கர்வமுடன் நின்றிருப்பதுமான சிலைகள் மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் ஆதி  சங்கரருக்கு சௌந்தர்ய லஹரியை வழங்குவதும் அதை நந்திகேஸ்வரர் அவர் கையிலிருந்து பிடுங்குவதும் அதனால் அதில் பாதி காணாமல் போவதுமான காட்சிகள் அருமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன இது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

ஸ்ரீ   தர்மநாதேஸ்வரரையும் அம்பாளையும் நினைத்து வணங்கி வழுபடுபவர்களுக்கு எந்த காரியம் நினைத்தாலும் இறைவன் அருளால் வெற்றி கிடைக்கிறது என்பது எல்லோருடைய  நம்பிக்கை.

MK 6.png
MK 5 E.jpg
MK 1.png
Mkolathur 2.jpg
MKolathur.png
MK 4.png
MK 2.png
MK Aerial View 2.png
bottom of page