கரைப்பூண்டி
போளூருக்கு 5 km கிழக்கே சேயாற்றின் தென் கையில் கரைப்பூண்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சப்த கைலாயத்தில் இரண்டாவது க்ஷேத்திரமான பாலசுந்தரி சமேத ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 1 ஏக்கர் நிலா பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் 10ம் நூற்றாண்டைச்ச்சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னர்களும் பின்னர் வந்த விஜயநகர மற்றும் சம்புவராய மன்னர்களும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
இறைவன்: ஸ்ரீகண்டேஸ்வரர்
இறைவி: பாலசுந்தரி
ஸ்தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம்: சேயாறு
இவ்வாலயத்தில் தெற்கு நோக்கிய பிரதான நுழை வாயிலில் உள்ள மண்டபத்தில் காமதேனு மீது அமர்ந்த அம்மையப்பன் உருச்சிலையும் ஸ்ரீ வினாயகர் மற்றும் ஸ்ரீ முருகன் சிலைகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மூலவரும் அம்பாளும் கிழக்கு நோக்கிய திருமுகங்களுடன் பக்தர்களுக்கு தர்சனம் தருகிறார்கள். மூலவர் ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசித்து வலம் வருகையில் தேவகோஷ்டங்களில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ துர்கை, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனிசந்நிதிகளில் உரிய இடங்களில் அருள் பாலிக்கின்றனர்.
மூலவர் சந்நிதிக்கு வடக்கே தனி சன்னதியில் அம்பாள் அருள்மிகு பாலசுந்தரி நின்ற நிலையில் காணவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சன்னதியின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் மேல் கூரையில் சோழர் காலத்து கல்வெட்டுகளும் யானை முக மீன்கள், இரட்டை மீன், சந்திரனை நாகம் பிடித்தல் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் ஆலயத்துக்கு வடகிழக்கே சூரியனுக்கு ஒரு பழமை வாய்ந்த சிலை உள்ளது. கிழக்கில் ஸ்தலவிருட்சமான வில்வ மரம் வானுயர்ந்து நாகலிங்க காய்களும் பஞ்ச முக வில்வ இலைகளும் கொண்டு தனி சிறப்புடன் உள்ளது.